தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு சொன்னது யார்?

Share Now
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்தவர்களின் வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்து பொலிசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பமொன்று, விடுமுறைக்காக இலங்கை திரும்பிய நிலையில், மட்டக்களப்பிற்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றிற்கு நேற்று முன்தினம் சென்றவர்கள், நேற்று உல்லைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.

உல்லையிலிருந்து திரும்பும்போது, காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தமிழ் இளம்பெண்களின் ஆடை தொடர்பில், அங்கிருந்த முஸ்லிம்கள் சிலர் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுற்றுலா சென்றவர்களிற்கும், அவர்களிற்குமிடையில் முரண்பாடு தோன்றியது. இதையடுத்து, பொருட் கொள்வனவை நிறுத்தி விட்டு விடுதிக்கு திரும்பி விட்டனர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

இந்த நிலையில் இன்று காலை அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக பொலிஸாருக்கு சிலர் தவறான தகவல் வழங்கியுள்ளனர். சுற்றுலா சென்ற வெளிநாட்டு குடும்பத்தின் வாகன இலக்கத்தை வழங்கி, அதில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று காலை குறித்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வானிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

எனினும், எந்தவித ஆயுதங்களோ, சந்தேகத்திற்குரிய பொருட்களோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று திரும்பி சென்றனர்.

அவர்கள் வந்த வான் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு சோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டது.

காத்தான்குடியிலுள்ள சிலரே தவறான தகவல் கொடுத்து, தம்மை சிரமப்படுத்தியதாக அந்த குடும்பம் விசனம் தெரிவித்துள்ளது.


Share Now
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *