தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 0750973758 | மின்னஞ்சல் battimedialk@gmail.com

காந்தியை மதியுங்கள் அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் ஆலய இராஜகோபுரத்தில் ஏற்றி கடவுளாக்கி விடாதீர்கள் .

ஈழத்தின் மகுடமாய் இருக்கக் கூடிய யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ளது வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்.

இந்த ஆலயத்தில் அமைக்கபட்டுள்ள இராஜகோபுரத்தில், இந்தியாவின் அகிம்சாவாதியான மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழர்களாகிய நாம் இந்த செயலை செய்ததற்கு வெட்கித்தலைகுனிய வேண்டும்.

ஆலயங்கள் என்பது ஆண்டவன் குடியிருக்கின்ற அழகான இடம். அதாவது ஆன்மாக்கள் லயிகின்ற இடம் என்பதனால் தான் அதனை ஆலயம் என்கின்றோம்.

அங்கு மனிதர்கள்சென்று வணங்கலாமே தவிர ஆண்டவனின் விதானமாக இருக்ககூடிய இராஜ கோபுரத்தில் அமரக்கூடாது. இது அனைவருக்குமே தெரிந்த விடயம் தான்.

இப்படி இருக்கையில் எம் ஈழத்திற்கோ அல்லது எமது சமுதாயத்திற்கோ சற்றும் பொருந்தாத ஒருவரின் சிலையானது இராஜகோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளமை கண்டிக்கப்படவேண்டிய விடயம்.

மகாத்மா காந்தி இந்தியாவிற்கு வழிகாட்டியவராக அகிம்க்ஷா வாதியாக இருக்கலாம், ஆனால் ஈழத்தமிழரிற்கு? காந்தியை ஆலய இராஜ கோபுரத்தில் வைப்பது சரி எனில், காந்தியிலும் பார்க்க தியாகி திலீபன் எந்த வகையில் குறைந்துபோய்விட்டார்?

தன்னுடலை தன்மக்களிற்காய் உண்ணா நோன்பிருந்து ஆகுதியாகிய திலீபனிற்கு என்ன செய்யப்போகின்றது நம் தமிழ் சமூகம்? அதுமட்டுமா, எம் விடியலுக்காய் எத்தனை எத்தனை உயிர்களை நாம் பலிகொடுத்துள்ளோம். யாராவது நினைத்துப்பார்த்தீர்களா? உண்மையாய் நமக்காக உதிரம் சிந்தியவர்களை நினைவு கூரக்கூட உரிமை இல்லாதவர்களாகி நாம் அல்லல் படுகின்றோம்.

எத்தனை எத்தனை காந்தியவாதிகள் நமக்காய் நம் நாட்டில்… அன்னை பூபதி தன் தள்ளாத வயதில் யாருக்காக போராடி உயிர் நீத்தார். அவருக்கு என்ன செய்திருக்கின்றோம் நாம்? ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள் உறவுகளே.

இன்றும் எத்தனையோ தாய்மாரின் கண்ணீர் அடுபங்கரையருகில் தம் பிள்ளைகளின் புகைப்படங்களை பார்த்து கண்ணீர்விட்டுகொண்டு இருக்கின்றார்கள். எத்தனை பேரிற்கு தெரியும் அவர்களின் கண்ணீர்? ஊமையின் பாக்ஷைகளாய் ஒவ்வொரு நொடியும் உருகிப்போய்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள்.

மகாத்மா யாழ்ப்பாணத்திற்கு வந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. அவை வெறும் கட்டுக்கதைகளே. வரலாறுகளை நாம் படிக்கவில்லையா? இல்லை நாம் வாழ்ந்த வரலாறுகளை மறந்து போய்விட்டோமா?

காந்தியை மதியுங்கள் அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் ஆலய இராஜகோபுரத்தில் ஏற்றி அல்ல… அதற்கென்று இடங்கள் இருக்கின்றன.

எங்களிற்காக எதுவுமே செய்யாத காந்தியை ஆலய இராஜகோபுரத்தில் ஏற்றுகின்றீர்கள் என்றால் ,

நமக்காய் உயிர்நீத்த ஆயிரமாயிரம் உயிர்களிற்கு வீட்டிற்கொரு இராஜகோபுரம் அல்லவா கட்டி வணங்கவேண்டும். காந்தியை கோபுரத்தில் ஏற்றியவர்கள் இதையும் செய்வீர்களா?

உங்களிடம் ஒரேஒரு வேண்டுகோள் நாளைய வரலாறுகளை படிக்கும் நம் சந்ததிகள் நம்மை காறித் துப்பும்படி செய்துவிடாதீர்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: