அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெறுவதற்கு இடையில் சுமார் 11 மாதகால இடைவெளி காணப்பட்டாலும் கொவிட் – 19 வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி விருத்தியில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்துவரும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்று செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளின்படி அஸ்ட்ராசெனிகா முதலாம் கட்டத் தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு இடையிலான கால இடைவெளி 45 வாரங்கள் வரை நீடித்தாலும்கூட நோயெதிர்ப்புச் சக்தி மேம்பாடு அடைகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தடுப்பூசிப் பற்றாக்குறையின் காரணமாக, தமது மக்களுக்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியை வழங்குவதில் தாமதத்தை எதிர்கொண்டிருக்கும் நாடுகளுக்கு இந்தத் தகவல் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
அதேவேளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பரிசோதனைகளில் மூலம் முதலாம்கட்டமாக அஸ்ராசெனேகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதன் ஊடாக நோயெதிர்ப்புசக்தி விருத்தியடைவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆரம்பக் கட்டப் பரிசோதனைகளின் பிரகாரம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மேற்கூறப்பட்டவாறான பிறிதொரு தடுப்பூசியை வழங்குவதன் மூலம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை வழங்குவதற்கு நிகரான பிரதிபலன் கிடைக்கப்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இதன்மூலம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறையின் காரணமாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடுகள் பயனடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.