ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ​பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 31 பேரும் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

0
14

பாராளுமன்றத்தில் நேற்று (08) சமர்ப்பிக்கப்பட்ட ஜெனரல் சேர் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் ​பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 31 பேரும் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பொல்துவ சுற்றுவட்டத்திலேயே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (08)  முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள் பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். எனினும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்து பஸ்களில் ஏற்றினர். இவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் அடங்குகின்றார்.

பொலிஸாரில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் நேற்று (08) குற்றஞ்சாட்டியிருந்தார்.

“ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றி தூர பிரதேசங்களிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு எவ்விதமான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படாமலே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் நேற்றுமாலை 6 மணியளவில் அவர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here