இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திற்கு நேரடி கள விஜயம் செய்துள்ளார்.

0
93

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி எல்லை தொடர்பான பிரச்சனைகளை நேரடியாகக் கள ஆய்வுசெய்து தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திற்கு நேரடி கள விஜயம் செய்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை(17) மேற்கொண்ட இவ்விஜயத்தின்போது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி நமசிவாயம் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விஜயத்தின்போது நீண்டகாலமாக ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தின் பெயர் கர்பலா பொலிஸ் நிலையம் என காணப்படுவதாக அப்பகுதி கிராம மட்ட அமைப்புக்களும் ஆலயபரிபாலன சபையினரும் இராஜாங்க அமைச்சருக்குச் சுட்டிக்காட்டியதற்கிணங்க அப்பொலிஸ் நிலையத்தின் பெயரை ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பொலிஸ் நிலையமென பெயர்மாற்றம் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்கான உடனடி உத்தரவுகளை மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு பிறப்பிப்பித்தார்.

அத்தோடு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள அரச காணிகளை ஊடறுத்து மண்முனைப்பற்று பிரதேச சபையின் எந்தவொரு அனுமதியுமின்றி கட்டடங்களை உடைத்த எச்சமான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதைகளையும், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அரச காணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது அவற்றை அகற்றுவதற்கான பூர்வாங்க சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மண்முனைப்பற்று பிரதேச சபையின் சபைக்கூட்டத்தில் பெரும்பான்மை பிரதேச சபை உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி கனரக வாகனங்களைப் பயன்படுத்தி உடனடியாக இந்த நடைபாதைகளை ஆக்கிரமிப்பு காணிகளை அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான பூரணமான ஒத்துழைப்புக்களை மண்முனைப்பற்று பிரதேச சபையிலுள்ள அனைத்து தமிழ் இனப்பிரதேச சபை உறுப்பினர்களும் வழங்கவேண்டுமென்றும், அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத எந்தவொரு தமிழ் இனப்பிரதேசசபை உறுப்பினர்களும் தமிழர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஆரையம்பதியின் கடற்கரையோரமாக எல்லைப்பகுதி காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆரையம்பதி கடற்கரை நரசிங்கப் பெருமானாலய சூழலைப் பார்வையிட்டதோடு அவ்வாலயத்தின் உறுதியான இருப்பே ஆரையம்பதியின் நீண்டகால எல்லை மற்றும் கடல்வள இருப்பு பாதுகாப்பிற்கு அவசியமானதென அமைச்சர் கருத்துரைத்துள்ளார்.

ஆரையம்பதி கடற்கரை நரசிங்கப் பெருமானாலய நிர்வாக சபையினரின் வேண்டுகோளிற்கமைய ஆலய வளாகத்துள் தென்னங்கன்று ஒன்றையும் இராஜாங்க அமைச்சர் நட்டு வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here