“இரு டோஸ்கள் பைஸர் அல்லது இரு டோஸ்கள் அஸ்ட்ராஜெனகா எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டராக வேறு கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.

0
40

இருவேறு கொரோனா தடுப்பூசிகளைப் செலுத்திக் கொள்ளும்போது அவை கொரோனா வைரஸை எதிர்த்துச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி குழுவில் உள்ள காம் காவ் நடத்திய ஆய்வில், “இரு டோஸ்கள் பைஸர் அல்லது இரு டோஸ்கள் அஸ்ட்ராஜெனகா எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டராக வேறு கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். இவை கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பான எதிர்வினையைத் தருகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகம் தூண்டுகின்றன. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய துணை மருத்துவ அலுவலர் ஜோனாந்தன் வான் டாம் கூறும்போது, “தற்போதுள்ள கொரோனா தடுப்பூசி முறையே சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசிகள் கலப்பு என்பது எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கலாம். இது தொடர்பாக எதிர்காலத்தில் கவனம் செலுத்துவோம்” என்றார்.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முதல் டோஸாக கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று ஜெர்மனி அறிவித்தது. ஸ்பெயினிலும் இம்முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரு வேறு டோஸ்களை செலுத்தும் முறை இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், ”முதல் டோஸுக்கு ஒரு தடுப்பு மருந்தையும், இரண்டாவதாக வழங்கும் பூஸ்டர் டோஸுக்கு இன்னொரு தடுப்பு மருந்தையும் சேர்த்து வழங்கினால் என்னவென்ற கேள்வி ஏற்கெனவே எழுந்துள்ளது. இதனால், பக்கவிளைவுகள் சற்று அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகளும், பக்க விளைவுகள் இருந்தாலும் கூட எதிர்ப்பணுக்களைச் சற்று அதிகமாக உருவாக்குவதாகவும் சில தரவுகள் கூறுகின்றன. ஆனால், இதை உறுதிப்படுத்த ஒன்றிரண்டு ஆய்வு முடிவுகள், நிறைய தரவுகள் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here