பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிவகித்த காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த விடயங்களில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார் என பின்தங்கிய கிராமிய பிரதேசஅபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்
அதற்காக வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசியல் வரலாற்றில் பல திருப்புனைகளுக்கு காரணகர்த்தாவான பசில் ராஜபக்ஷ மிக விரைவில் மீண்டும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் முக்கிய பொறுப்புக்களை உள்ளடக்கிய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
“அண்மை காலமாக, ஜனாதிபதியின் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணிக்கு தலைமை தாங்கி, நாட்டில் வறுமைக் கோட்டு கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல வேலைத்திட்டங்களையும் அவர் முன்னெடுத்திருந்தார்” என்றார்.