கமநல சேவை அலுவலங்களுக்கு முன்னால்,  எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டம் – எம் ஏ சுமந்திரன்

0
44

வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் உள்ள  சகல கமநல சேவை அலுவலங்களுக்கு முன்னால்,  எதிர்வரும் திங்கட்கிழமை, போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக,  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்தில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
  
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள், உரத்தைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள் எனவும் குறிப்பாக, தென் பகுதியிலும் இந்த பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அங்கும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று காரணமாக, மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல எனத் தெரிவித்த அவர்,  அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்தில் கொண்டு,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவைத் திணைக்களங்களுக்கும்  முன்னால், குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதென தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

 “குறிப்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 28 கமநல சேவைநிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கும் முன்னால், 18ஆம் திகதி திங்கட்கிழமையன்று, காலை 9 மணிக்கு,  சமூக இடைவெளியை பின்பற்றி, தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். எமக்கு பசளை கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்” என்றும், சுமந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here