கிழக்கில் மேலும் 19 பாடசாலைகள், தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளன .

0
166

கிழக்கு மாகாணத்தில் மேலும் 19 பாடசாலைகள், தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.

இவற்றையும் உள்ளடக்கியதாக 73 பாடசாலைகளின் பெயர்ப்பட்டியல், ஆளுநருக்கு சிபாரிசு செய்யப்பட்டு, கல்வி அமைச்சுக்கு, கடந்த 10ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே 54 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக சிபாரிசு செய்யப்பட்ட போதிலும் மேலும் 19 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு, மொத்தமாக 73 பாடசாலைகளாக இப்பட்டியல் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

“இத்திட்டத்துக்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே 36 தேசிய பாடசாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது 73 பாடசாலைகள் புதிதாக தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்படுகின்ற நிலையில் கிழக்கில் மொத்தமாக 109 தேசிய பாடசாலைகள் இயங்கவுள்ளன” என்றார்.

“அத்தோடு, புதிதாக தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்படும் பாடசாலைகளுக்கு தலா 02 மில்லியன் ரூபாய் வீதம் நிதியை, கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே இந்த நிதி வழங்கப்படும். அதேவேளை 2023ஆம் ஆண்டு வரை புதிய கட்டுமானங்களுக்கும் எவ்வித நிதியொதுக்கீடும் வழங்கப்படமாட்டாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிதியொதுக்கீடுகளின்போது, கூடுதல் நிதி வழங்கக்கூடிய வாய்ப்பும் தனியான ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிட்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here