கொரோனாவுக்கு கோவில் .

0
108

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் 2ஆவது அலையாக உருவெடுத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 3ஆவது அலையும் வரப் போவதாக எச்சரிக்கைகள் விடப்பட்டு உள்ளன.

இதனால், கொரோனா என்றாலே மக்களிடம் இனம்புரியாத அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா மீதான பயம் ஒரு புறம் இருக்க, சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி’ சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. 

இந்தநிலையில், தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராஜரத்தினம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கொரோனா கோவில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜரத்தினத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. 

கண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.

முந்தைய காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது. இதேபோல் தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோவில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவில் கோவில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோவிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அவர் வைத்துள்ள அறிவிப்பு பதாகையில் 1962ஆம் ஆண்டு என குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, “அந்த ஆண்டிலும் ஏதோ நோய் பாதிப்பில் மக்கள் பலர் உயிர் இழந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். அதனால் அதை குறிப்பிட்டேன்” என்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here