கொவிட் -19 பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, குறைவடையவில்லை.

0
79

சமூகத்தில் திரிபடைந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை அடையாளம் காண எழுமாறான பிசிஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வைரஸ் பரவல் பாரதூரமான அபாயத்தை தோற்றுவிக்குமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இவ்வாறு எச்சரித்தார்.

மேலும் நாளாந்தம் 50 மரணங்கள் என்பது வழமையான ஒன்றைப்போன்று ஆகியுள்ளது. எனினும் இது துரதிஷ்டவசமானதாகும்.

அதற்கமைய மாதமொன்றுக்கு சராசரியாக 1,500 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கக் கூடுமென்று எதிர்பார்க்க முடியும்.

இவ்வாறான நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மக்கள் செயற்படுகின்றமை மருத்துவ துறையினரான எமக்கு மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது.

தற்போது கொவிட் -19 பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, குறைவடையவில்லை. ஒக்சிஜன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

மக்கள் அபாயத்தை உணராமல் பொறுப்பற்று செயற்படுகின்றமையின் காரணமாகவே வைத்தியர்கள் தொடர்ந்தும் நாட்டை முடக்க கோருகின்றனர்.

இந்தக் கோரிக்கை மக்களின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்படுகிறதே தவிர, வைத்தியர்களின் தேவைக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது கொவிட் -19 தொற்று எந்தளவுக்கு வியாபித்துள்ளதென்பதை அடையாளம் காண்பதற்கு எழுமாற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காவிட்டால் நிலைமாறிய புதிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியாது.

அத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதுடன் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே மரணங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here