சட்டவிரோத செயற்பாடுகளாலேயே இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது.

0
11

சட்டவிரோத செயற்பாடுகளாலேயே இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக, அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.

17ஆவது தேசிய பாதுகாப்பு நினைவு தினத்தையொட்டி, “நிலையான அபிவிருத்தியின் மூலம் அனர்த்தத்துக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்குதல்” எனும் தொனிப் பொருளில், அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு, பொத்துவில் பிரதேச செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொத்துவில் உதவிப் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பதில் அரசாங்க அதிபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“அனர்த்தங்களிலிருந்து  மக்களைப்  பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் விரிவான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கென அரசாங்கத்தால் அதிகளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் செயற்பாடுகளில் அனர்த்த அபாய குறைப்பு, சுற்றுச் சூழல் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற நழுவல் போக்கு போன்ற விடயங்களில் ஒன்றாகவும் முறையாகவும் செயற்படாமையின் காரணமாக அனர்த்த ஆபத்து வலுவடைந்தன் விளைவாக இழப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

“அனர்த்தத்துக்கு முன்னர் செயல்படுத்த வேண்டிய அனர்த்த குறைப்பு, அனர்த்த தணிப்பு, அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

“அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்காக பயிற்றுவிப்பாளர்கள் சகல பிரதேச செயலகங்கள் சுகாதாரத் துறையினர் மற்றும் ஏனைய துறைகளிலும் உள்ளனர்.

“அனர்த்தம் தொடர்பாக பொது மக்களுக்கு பிரதேசம் தோறும் விழிப்புணர்வு மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பாகவும் விழிப்புணர்வூட்டப்பட்டு வருகின்றன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here