சிறுமி கிஷாலினியின் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – த.ம.வி.பு கட்சியின் செயலாளர்!

0
29

சிறுமி கிஷாலினியின் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நிரந்தர வீடற்ற வறிய குடும்பம் ஒன்றிற்கு நிர்மானித்து கொடுக்கப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னால் அமைச்சர் றிசாட்டின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த இந்த சிறுமி வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு அமர்த்தி இன்று அந்த சிறுமி பரிதாபகரமாக மரணமடைந்து இருக்கின்றார். இதற்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்கின்ற அடிப்படையில் எந்தவிதமான அரசியல் வர்க்க வேறுபாடுகளும் இன்றி அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் இறந்த அந்த சிறுமிக்கான நீதி வழங்கப்பட வேண்டும்.

இது நடந்திருப்பது நல்லாடசியின் முக்கியமான அமைச்சரின் வீட்டிலாகும். கடந்த அரசாங்கத்தில் நல்லாட்சிக்காக கொடி பிடித்தவர்கள் முட்டு கொடுத்தவர்கள் இன்று அந்த விடயம் தொடர்பில் வாய்திறக்காமல் உள்ளனர். வறுமையை காரணம் காட்டி இந்த சிறுமி இறந்தமை தொடர்பில் அவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்பது எமக்கு தெரியவில்லை.

எமது கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நாம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் இறப்புக்காக நீதி வேண்டி நிற்போம். ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்று அந்த சிறுமியின் நீதிக்காகவும் நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டுமென்பதற்காக நாம் பாடுபடுவோம்.

அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கும் சிறுவர்களுக்கெதிரான குற்றங்களுக்குமாக தனியான நீதிமன்றம் வேண்டுமென நாம் கடந்த காலத்திலிருந்து குரல் கொடுத்தோ வருகின்றோம். ஆகவே குற்றம் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனபதே எமது கோரிக்கை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here