தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவொன்று தயாராகி வருகின்றது.

0
27

தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரங்களை பகிர்ந்து இனப்பிரச்னைக்கான நிரந்ரத அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மேற்படி குழுவினர் முன்வைக்கும் முகமாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அத்துடன், தமிழகம் செல்லும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு மாநிலத்தை ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தொல். திருமாவளவன், வை. கோபாலசாமி உள்ளிட்டவர்களையும் தமிழர் விவகாரங்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்களையும் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்தப் பயணம், தமிழக அரசியல் தலைமைகளுக்கும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கை தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதி நிதிகளுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வழிசமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில், இந்தப் பயணத்தில் பங்கெடுப்பவர்கள் பற்றிய தகவல்கள் எவையும் வெளிப்படுத்தப்படாத போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, இந்த நகர்வில் வகிபங்காற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்புக்களில் பங்கேற்கக்கூடும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here