நீண்டகாலமாக தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் -சரத் பொன்சேகா

0
46

தன்னைப் படுகொலை செய்ய முயற்சித்தவர்கள் உட்பட நீண்டகாலமாக தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் நீதிகிடைக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நேற்று முன்வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி நள்ளிரவில் கொழும்பு வெலிக்கடை சிறைக்கு கொண்டுவரப்பட்டபோது, யுத்தத்தை நிறுத்திய இராணுவத் தளபதியை வெலிக்கடை சிறைக்குள் கொண்டுவருகின்ற நிலையில், போரில் ஈடுபட்ட எங்களை சிறைக்கு வெளியே கொண்டுசெல்கின்றார்கள் என்று ஓர் இளைஞன் கூறியதை அவதானித்தேன்.

இன்னுமொரு கதை உள்ளது. என்னை வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தபோது எனது அருகே என்னை படுகொலை செய்வதற்காக தற்கொலைதாரியை அழைத்துவந்த நபர் அருகில் அமர்ந்திருந்தார். மொரிஸ் என்கின்ற இளைஞன் அவர். அவர் இன்னும் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுவார். இன்னும் அவர் சிறையில் உள்ளார். ஆனால் வழக்கு முடியவில்லை.

அதுபோன்ற தாக்குதல்களுக்கு நான் முகங்கொடுத்துள்ள போதிலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன்.

சுமார் 15 வருடங்களாக அந்த இளைஞன் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தண்டனையே அவருக்குப் போதும்.

ஆகவே அரசாங்கம் உண்மையான நடவடிக்கையை எடுத்து அவர்களுக்கு நீதியை அளிக்கும்படி கோருகின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here