பசில் ராஜபக்ச, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பலமாக செயற்படுவார்.

0
74

முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரருமான பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், பசில் ராஜபக்சவே இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், இது குறித்து தாம் இதுவரை கலந்துரையாடவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவது மற்றும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்பது தொடர்பில் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் எனவும், அமைச்சுப் பதவியைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளின் ஒருசில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் செயற்படும்போது, பசில் ராஜபக்ச எதற்காக? என ஊடகமொன்றில் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “

இது ஒரு மூன்று சக்கர வண்டி போன்றது. மஹிந்த ராஜபக்ச முன் சக்கரம், கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் பின்புற சக்கரங்களைப் போன்றவர்கள். சக்கரங்களில் ஏதேனும் ஒன்றைக் காணவில்லை என்றால், வண்டி இயங்காது. இதுவே யதார்த்தம் ” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பலமாக செயற்படுவார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here