பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாகாண சபை தேர்தல் தொடர்பில் வலியுறுத்தி வருகிறார், சட்டவரைபையும் முன்வைத்துள்ளார் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

0
14

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயத்தை அடுத்தே மாகாணசபை
தேர்தல் தொடர்பான பேச்சுகள் இடம்பெறுவதாக கூறப்படுவதில் எவ்விதமான
உண்மையும் இல்லையெனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,
இந்தியாவின் அழுத்தம் இருப்பதாக கூறுவதிலும் உண்மையில்லை என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (11) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது தொடர்பான கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் தமது சந்திப்புகளில் இந்த விடயம் குறித்து வலியுறுத்தி வருகிறார். அதுமாத்திரமின்றி தனிப்பட்ட
உறுப்பினராக சட்டவரைபையும் முன்வைத்துள்ளார் என்றார்.

எனவே, தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாம் முன்னெடுக்கும்
செயற்பாடுகள் இந்தியாவின் அழுத்தத்தால் அல்ல என தெரிவித்த அவர், இந்திய
வெளிவிவகார செயலாளரின் விஜயமானது இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார
உறவுகள் உள்ளிட்ட வேறு விடயங்களை மையப்படுத்தியதாகவே அமைந்தது
என்றார்.

நாம் தொடர்ச்சியாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து
கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம் என தெரிவித்த அவர், ஜனாதிபதி
தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் உள்ள நிலையில், அதுவரை மாகாண சபைத்
தேர்தலை நடத்தாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

எனவே, இது தொடர்பான முடிவை எடுப்பதற்கு இந்திய வெளிவிவகார செயலாளர்
இலங்கைக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது என்பதால் மாகாண சபைத்
தேர்தல் தொடர்பான விடயம் அவரது விஜயத்தில் பேசப்பட்டது என
தெரிவிக்கப்படுவதானது, உண்மைக்கு புறம்பான விடயம். அத்துடன், 13ஆவது
திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு
தொடர்ந்தும் வெளிப்படையாகவே உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here