பாலியல் துன்புறுத்தல் புகாரில் இருந்து நடிகர் அர்ஜுன் விடுவிப்பு.

0
50

சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை மீ டூ என்ற ஹாஷ்டாக் மூலம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். பிரபல பாடகியான சின்மயி தனக்கு நடந்த கொடுமைகளை சோஷியல் மீடியாவில் பகிரங்கமாக தெரிவித்தார். அதன் பிறகு பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை தொடர்ந்து மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

அதை சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இப்படி இருக்கும்போது சில வருடங்களுக்கு முன் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நிபுணன். இந்தத் திரைப்படத்தில் கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் நடிக்கும் போது நடிகர் அர்ஜுன் தவறான கண்ணோட்டத்தில் தன்னை பார்த்ததாக அவர் ஊடகங்களில் தெரிவித்தார். இது சம்பந்தமாக காவல் துறையிலும் அவர் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் அர்ஜுன் நிபுணன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது தன்னை தவறான நோக்கத்துடன் நெருங்கியதாக தெரிவித்துள்ளார்.

இது தனக்கு அசவுகரியமாக இருந்ததாகவும், இதுபற்றி தன் இயக்குனரிடம் ஏற்கனவே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். நிபுணன் திரைப்படம் வெளியாகி பல மாதங்கள் கழித்துதான் ஸ்ருதி இந்த புகாரை அளித்துள்ளார். இதனால் திரையுலகைச் சார்ந்த பலரும் ஸ்ருதி வேண்டுமென்றே அர்ஜுன் மீது பழி போடுவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிபுணன் பட இயக்குநர், ஸ்ருதி கூறிய அந்தக் காட்சி இன்னும் நெருக்கமாக எடுக்கப்பட வேண்டிய காட்சி.

ஆனால் அர்ஜுன் என்னிடம் எனக்கு இளம் வயதில் மகள்கள் உள்ளனர். இது போன்ற காட்சியில் நான் நடிப்பது சரியாக வராது என்று கூறினார். அதனால் அந்த காட்சியில் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் ஸ்ருதி ஏன் இப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த புகாருக்கு அர்ஜுன் தரப்பிலிருந்து காவல்துறையில் விளக்கம் அளிக்கப்பட்டது. திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜுன் மீது இப்படி ஒரு பழி விழுந்தது அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாது, ரசிகர்களையும் அதிகம் பாதித்தது.

பல வருடங்களாக நடத்தப்பட்ட இந்த வழக்கில் தற்போது அர்ஜுன் மேல் எந்தத் தவறும் இல்லை என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விசாரணைக்கு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அர்ஜுன் நிரபராதி என்று வெளியான இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here