மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.

0
27

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரனின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவற்றில் கிழக்கு மாகாண சபையின் ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இதுதவிர மாவட்டத்தின் விவசாயிகள் எதிர் கொள்ளும் நீர் பிரச்சினை தொடர்பாகவும், குளங்கள் தொடர்பான அபிவிருத்தி தொடர்பாகவும், காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டினேஸ் கருணாநாயக்க, இராணுவ தரப்பு பிரதானி, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here