மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேசிய விளையாட்டு தின நிகழ்வு!

0
61

இலங்கை அரசாங்கம் நடப்பாண்டு தொடக்கம் “டங்கன் வைட்” அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்த நாளாகிய ஜீலை 31ஆந் திகதியை விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம் செய்துள்ளது.

அதனை முன்னிட்டு தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (30) காலை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் அரச நிருவாக சுற்றிக்கையின் பிரகாரம் இடம்பெற்றது.

மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, உடற்பயிற்சி மற்றும் உள்நாட்டு இயற்கை உற்பத்தி உணவுகளின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதாக மேலதிக அரசாங்க அதிபர் அவர்களின் விசேட உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் அலுவலக உடையில் பங்கேற்கக்கூடியதான 15 நிமிட எளிய உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

மேலும் ஆரோக்கியமான சந்ததியினை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித் திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்குவதே தேசிய விளையாட்டு தினத்தின் குறிக்கோளாகும்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 வைரஸ் காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கி.தயாபரன்,
மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக கணக்காளர் ம.வினோத் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here