மாபெரும் டென்னிஸ் (Grand Slam) இறுதிப் போட்டி ஒன்றில் விளையாடுவதற்கு கிரேக்க வீரர்சிட்சிபாஸ் தகுதிபெற்றார்.

0
66

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு முதலாவது வீரராக 23 வயதான கிரேக்க வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் தகுதிபெற்றார்.

மாபெரும் டென்னிஸ் (Grand Slam) இறுதிப் போட்டி ஒன்றில் விளையாடுவதற்கு சிட்சிபாஸ் தகுதிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.

பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது அரை இறுதிப் போட்டியில் 24 வயதான ஜேர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரேவை 3 – 2 என்ற செட்கள் அடிப்படையில் சிட்சிபாஸ் வெற்றிகொண்டார்.

இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட அரை இறுதிப் போட்டியின் முதல் இரண்டு செட்களில் முறையே 6 – 3, 6 – 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிட்சிபாஸ் இலகுவாக வெற்றிபெற்றார்.

இதனை அடுத்து இறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கு சிட்சிபாஸுக்கு ஒரே ஒரு செட் வெற்றியே தேவைப்பட்டது.

ஆனால், அடுத்த இரண்டு செட்களிலும் முழு ஆற்றலை வெளிப்படுத்திய ஸ்வரேவ் முறையே 6 – 4, 6 – 4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றதை அடுத்து செட்கள் நிலை 2 – 2 என சமமானது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க கடைசி செட்டில் முதலாவது ஆட்டத்தில் சிட்சிபாஸும் இரண்டாவது ஆட்டத்தில் ஸ்வரேவும் வெற்றிபெற ஆட்டம் 1 – 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமமானது.

அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்ற சிட்சிபாஸ் 4 – 1 என முன்னிலை அடைந்தார்.

6ஆம் ஆட்டத்தில் ஸ்வரேவும் 7ஆம் ஆட்டத்தில் சிட்சிபாஸும் வெற்றிபெற புள்ளிகள் நிலை 5 – 2 என சிட்சிபாஸுக்கு சாதகமாக அமைந்தது.

8ஆவது ஆட்டத்தில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டவண்ணம் இருந்தனர். இருவரும் தலா 40 புள்ளிகளுடன் சமநிலையை அடைந்ததும் மாறிமாறி வெற்றிக்கான அனுகூல வாய்ப்பை பெற்றவண்ணம் இருந்தனர். கடைசியில் ஸ்வரேவ் வெற்றிபெற்று ஆட்ட நிலையை 3 – 5 என ஆக்கினார்.

9ஆவது ஆட்டத்தில் அற்புத ஆற்றலை வெளிப்படுத்திய சிட்சிபாஸ், அந்த ஆட்டத்தை மிக இலகுவாக தனதாக்கிக்கொண்டு கடைசி செட்டை 6 – 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here