
பமுணுகம – உஸ்வெடகெய்யாவ பகுதியில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த தேரர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அதே முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 73 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பமுணுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்கெடகெய்யாவ பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று (19) சனிக்கிழமை காலை இடம்பெற்ற மோதல் ஒன்றின் போது , அங்கு வசித்து வந்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது அலுத்வல சுமனரத்தன என்றழைக்கப்பட்ட தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குறித்த முதியோர் இல்லத்தில் வசித்து வந்த , ஜா-எல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முதியோர் இல்லமானது , மனநோயாள் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை பாதுகாப்பாதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபரும் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவதினத்தன்று காலை , சந்தேக நபர் தேரரை பொல்லால் தாக்கியுள்ளதுடன் , இதன்போது படுகாயமடைந்த தேரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் , குறித்த முதியோர் இல்லம் உரிய விதிமுறைகளுக்கு கீழ் அனுமதிபெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுணுகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.