20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளது .

0
11

14.5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளைகொண்டு வருவது தொடர்பில்,  ஃபைசர் உற்பத்தி நிறுவனத்துடன், மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவானது விசேட இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளதுடன்,  இதற்கமைய, இவை 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளது என மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இந்த பூஸ்டர் தடுப்பூசி நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் என்ற முன்னுரிமையில் 20 வயதுக்கு மேற்பட்ட  அனைவருக்கும் எதிர்வரும் காலங்களில் செலுத்தப்படும் என்றார்.

இலங்கைக்கு இதுவரை 3,28,35,000 கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் , 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் சனத்தொகையினர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதுடன்,  20 தொடக்கம் 30  வயதுக்கு இடைப்பட்டவர்களுள் மூன்றில் இரண்டு சதவீதத்தினர்  தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றார்.

அத்துடன்,  எதிர்வரும் இரண்டு வாரங்களில் உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்காக, மாவட்ட ரீதியில் பணியாற்றும் கொரோனா விசேட வைத்தியர்கள், சுகாதார வைத்திய பணப்பாளர்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளதுடன்,  அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தற்போது தம்வசம் மாணவர்களுக்கு செலுத்துவதற்காக ஓரளவு  ஃபைசர் தடுப்பூசி உள்ளது என்றாலும், எதிர்வரும் 3 வாரங்களில்  10 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதுடன் நவம்பர் மாதம் மேலதிகமாக 17 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன என்றார்.

சினோபாஃம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அமெரிக்காவுக்கு செல்லமுடியாதென தெரிவித்து பலர் சினோபாஃம் ஏற்றிக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களும் அமெரிக்காவுக்குள் வர அனுமதி உண்டு என, அமெரிக்க சுகாதார தரப்பினர் அறிவித்தல் ஒன்றை நேற்று முன்தினம் விடுத்துள்ளனர் என்றார். 

எனவே, இதுவரை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்கள்,  விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here