5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவித்துள்ளது.

0
29

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை வெளியிடுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதுபோன்ற சிக்கித் தவிக்கும் கொள்கலன்களை விடுவிக்க மொத்தம் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

எஞ்சிய தொகையானது எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மத்திய வங்கியினால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதத்தில் இலங்கையின் தங்க கையிருப்பு 206.8 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

நவம்பர் இறுதியில் 382.2 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தங்க கையிருப்பு டிசெம்பர் மாத இறுதியில் 175.4 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.

இதேவேளை, நவம்பரில் 1.588 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்த கையிருப்பு 3.137 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here