கிழக்குப் பல்கலைக்கழக சமூகமும் சவுக்கடி பாலமுருகன் ஆலய சமூகமும் இணையும் கலைத் திருவிழா - 2022

 

 தொழில் மற்றும் சமூக இணைப்புக்கான மையத்தின் (CICL) செயற்திட்டத்தின் கீழ் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால்
ஒருங்கிணைக்கப்படும் சவுக்கடிச் சமூக மேம்பாட்டுக்கான கலைத்திட்டச் செயற்பாடு சவுக்கடி ஸ்ரீ பாலமுருகன் ஆலய முன்றலில் எதிர்வரும் 15.09.2022 திகதி இரவு 09 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரை இடம்பெறவுள்ளது.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகவுள்ள நிகழ்வில், வரவேற்பு நடனம், தலைமையுரை, இசையாற்றுகை, சிறப்புரைகள், நடன ஆற்றுகை, பிரதம அதிதி உரை, கூத்தாற்றுகை, இசைச்சமர்ப்பணம், நாட்டியநாடகம், சிந்துநடைக் கூத்து, நகைச்சுவை நாடகம் என்பன கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதுடன், சவுக்கடி கிராம மக்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழில் மற்றும் சமூக இணைப்புக்கான மையத்தின் பணிப்பாளரும், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி.மு.அருளானந்தம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்விற்கு பிரதம அதிதியாக
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளார் கலாநிதி புளோரன்ஷ் பாரதி கென்னடி மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

பல குறைபாடுகளுடன் காணப்படும் சவுக்கடி கிராமத்தின் குறைபாடுகளை போக்குவதற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சவுக்கடி கிராமத்தை கிழக்குப் பல்கலைக்கழகம் அண்மையில் தத்தெடுத்து, அதனை ஓர் மாதிரிக்கிராமமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டு, அதன் முதல் கட்டமாக ஒன்றிணைந்த மருத்துவ முகாம் மற்றும் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்றை குறித்த கிராமத்திலேயே அண்மையில் நடாத்தியிருந்தது. அதனை மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதன் இரண்டாம் கட்டமாகவே கிழக்குப் பல்கலைக்கழக சமூகமும்
சவுக்கடி பாலமுருகன் ஆலய சமூகமும் இணையும் கலைத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.