மூவின மக்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்

 


தமிழ் சமூகத்திற்கு ஏற்படுகின்ற அநீதிகளுக்காக மாத்திரமன்றி, ஏனைய சமூகங்களுக்கும் ஏற்படுகின்ற அடக்குமுறைகளையும் கருத்திற்கொண்டே பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மூவின மக்களும் இந்தக் காட்டுச் சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை  அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன், கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

 இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக  தமிழர்கள் தமது உரிமை, இருப்பு உட்பட பலவற்றை இழந்தவர்களாவே இருக்கின்றார்கள். எமது சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அநீதிகளுக்கு மாத்திரமல்லாமல், தற்போது ஏனைய சமூகங்களுக்கும் இச்சட்டத்தின் மூலம் ஏற்படுகின்ற அடக்குமுறைகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

எனவே இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும் இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட்ட காட்டுச் சட்டத்தை, மனித நேயத்திற்கு எதிரான சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்க ஒன்றுபட்டுச் செயற்படுவதோடு, இந்த நாட்டிலே அனைத்து இனங்களும சமஉரிமையுடன், சமாதானமாக, சமத்துவமாக வாழ அனைவரும் கரம்கோர்ப்போம் வாருங்கள் என்று தெரிவித்தார்.