கொழும்பு மாவட்டத்துக்குள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் நேற்று (26) அடிப்படை உரிமைகள் மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி வெள்ளிக்கிழமை (23) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
அதனை சவாலுக்கு உட்படுத்தியே சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முன்அனுமதியின்றி குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களை நடத்த முடியாது என வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, இலங்கை கடற்படைத் தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத் தலைமையகம் அக்குரேகொட, கொம்பனித் தெரு விமானப் படைத் தலைமையகம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை அதியுயர் பாதுகாப்பு வலயங்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.