இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை.

 


தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையர்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதாவும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படா விடின் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

நாடு முழுவதும் உணவு விலைகள் அதிகமாக இருப்பதால், பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உண்பதில்லை என்றும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்வதும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிவாரணத்துக்கு 63 மில்லியன் டொலர்களை உணவுத் திட்டம் திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதன் பாதியளவே தற்போது கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களிடமிருந்தும், ஐக்கிய நாடுகளின் மத்திய அவசரகால பதில் நிதியம், தனியார் துறை பங்காளிகள் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும் மொத்தமாக 29.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.