சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்றிரவு இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. முதலில், ஒரு கார் வெடித்து சிதறி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெடி விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்த சோமாலியா ஜனாதிபதி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தொழில்புரிபவர்கள் என பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அல் ஷபாப் என்ற இஸ்லாமிய அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கக்கூடும் என ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.