வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாகாண சபை தவிசாளர் ஒருவருக்கு உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றே ஒதுக்கப்படவுள்ளதுடன், அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 150 லீற்றர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
மேலும், சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு தீர்மானிக்கப்படும் என, சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொலைபேசி கொடுப்பனவாக, அலுவலக தொலைபேசிக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் வீடு மற்றும் அலைபேசிக்கு மாதம் 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மாகாண சபைகளின் தவிசாளர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் மற்றும் எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட போதும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.