கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்

 


வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அந்த பணத்தின் மூலம் நாட்டில் பல தேவையற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நடந்துள்ள ஒரே பலன் கட்டுமான ஒப்பந்தகாரர்களை வளப்படுத்துவது மட்டுமே எனவும் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் உலக வங்கியின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடனான  விசேட சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உலக வங்கி உதவியின் கீழ் பெறப்பட்ட நிதியில் மிகவும் வசதியான திட்டங்களை முன்கொண்டு செல்லவும். கட்டுமானத்திற்கு பின் செல்ல வேண்டாம். எங்கிருந்தோ பணம் வரும்போது கட்டிடம் கட்டவோ, பாதை அமைக்கவோ, கொங்ரீட் பாதை, காபட் பாதை அமைக்கவே பழகிவிட்டோம். 

இதுவரை அப்படித்தான் செய்து வந்தோம். இவற்றின் விளைவுகளை நாம் இப்போது பெற்றுள்ளோம். எனவே இனிமேல் அதை செய்யாதீர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் பல உள்ளன. இதுபோன்ற திட்டங்களுக்கு விரைவில் செல்லுங்கள்,'' என, அங்கிருந்த உள்ளூராட்சி அமைப்புகளின் தவிசாளர்களிடம் மேலும் கூறினார்.

இதில் பிரதம செயலாளர் ஆர்.எம்.எஸ்.பி ரத்நாயக்க, முதலமை அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.மணிவண்ணன், உலக வங்கியின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.