இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவால் தற்போதைய நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள முடிந்தது.

 


இலங்கையிலுள்ள சகலமக்களுடனும் இந்தியா எப்போதும் துணைநிற்பதாக குறிப்பிட்ட இலங்கைக்கான இந்திய  உயர் ஸ்தானிகர் கோப்பால் பாக்லே, இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவால் தற்போதைய நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்டிருந்த அவர்,  திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தரிசித்ததுடன் ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தின் நகரமண்டபத்திலே இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு 200 பேருக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தனை பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்ட த.தே.கூட்டமைப்பின் எம்.பியான த.கலையரசனுடன்  கலந்துரையாடிய உயர் ஸ்தானிகர் நல்வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்றபோது. அங்கு  பாரம்பரிய ரீதியில் தனக்கு வரவேற்பளித்த சிறுமிகளுடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.