இலங்கை மக்களுடன் இந்தியா என்றும் இணைந்திருக்கும் என இந்திய தூதுவர் கோபால் பாக்லே மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உதவித்திட்டத்தின் கீழான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்ற போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 200 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மக்களினால் தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியான காலத்தின்போது இந்திய உற்ற நண்பராகயிருந்து தொடர்ந்து உதவிவருவதையிட்டு இலங்கை மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாகயிருப்பார்கள் என இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.