மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோயினால் 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோயினால் 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகள் இறப்பது குறித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சர்வமத பேரவை மற்றும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனை சந்தித்த குழுவினர் அண்மைக்காலமாக கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர்திடீர் என இறப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இவ்வாறு கால்நடைகள் உயிரிழக்கும்போது அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 09தினங்களுக்குள் 200மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே இதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால் மாடுகள் இறப்பதை தவிர்த்திருக்கமுடியும் எனவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சில மருந்துகள் தனியார் நிலையங்களில் கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்ட நிலையில் அதிக விலைகள் கொடுத்து அந்த மருந்துகளை பெற்று மாடுகளுக்கு வழங்கியபோதும் அவை பலனளிக்கவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.