மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தின் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு.



















மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஹரோ லண்டன்  கிளையின் மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்களும் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வும்  நேற்று (30) திகதி மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கிய மண்டபத்தில்  மிக விமர்சையாக இடம்பெற்றது.

இலங்கையில் பிறந்து கடல் கடந்து  சென்று கர்நாடக சங்கீதத்தில் மேதையாக திகழ்ந்து இறைபதம் அடைந்த அமரர் சிவசக்தி  சிவநேசன் ஆசிரியரின் முதலாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு கல்வியில் சாதனை படைத்து  பல்கலைக்கழத்திற்கு  தெரிவான  மாணவ, மாணவியர், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிப்பு இடம்பெற்றதுடன், தேவை உடையவர்களுக்கான வாழ்வாதார  உதவிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் பல்துறை சார்ந்து சேவையாற்றும்  உயரதிகாரிகளுக்கும் இதன் போது கெளரவிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தின் தலைவர்  சமூகத்தொண்டர் க.துரைராஜா தலைமையில்  நடைபெற்ற  இவ் நிகழ்விற்கு  பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதுடன்  சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட ஊடக அதிகாரி வடிவேல் ஜீவானந்தன், செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியகலாநிதி ஸ்ரீநாத், வைத்திய நிபுணர் தமிழ்வண்ணன், கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான உமாசங்கர், செங்கலடி மத்திய கல்லுரியில் அதிபர் குகதாசன் என பல பிரமுகர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் மூத்த பிரஜைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டதுடன், நர்த்தன பவனம் நாட்டிய குழுவினர்களினால் கண் கவர் நடனம் அரங்கேற்றப்பட்டது. இதன்போது பிரதம அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.