பெண்கள், சிறுவர்களுக்கென தனியான நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக தனியான நீதிமன்றத்தை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்று, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்துகொள்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறித்த அதிகார சபைக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் நிலவும் குறைபாடுகள், மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வருகை தந்தேன்.

நாட்டின் சிறுவர்கள் தொடர்பில் எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது. சிறுவர்கள் என்பவர்கள் எமது நாட்டின் எதிர்காலம்.

எனவே மகளிர் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் என்பன இணைந்து சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குள் பாரியளவிலான குறைபாடுகள் காணப்படுகின்றன.

முதலாவது பொலிஸார் இந்த அமைச்சுக்கு நேரடியாக தொடர்புபடுவதில்லை.

அடுத்ததாக நாம் தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேன் முறையீடு செய்கின்றனர். இதனால் 330 வழக்குகள் குவிந்து கிடக்கின்றன.

இவ்வருடத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம்.

இவ்விடயங்கள் தொடர்பாக மக்கள் என்னை தேடி வருகின்றனர்.

வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து, பத்து வருடங்களாகின்றன. இதனை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என்று கூறுகின்றனர்.

எனவே, பெண்கள், சிறுவர்களுக்கென தனியான நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள், பெண்கள் தொடர்பிலான வழக்குககளை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் கொழும்பில் மட்டும் ஒரு நீதிமன்றத்தை உருவாக்கினால் போதும்.

எனினும் எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், யாழ்ப்பாணத்தில் உள்ளவருக்கு கொழும்புக்கு வந்து செல்ல முடியாது என்றார்.