மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் ஏற்பாட்டில் தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின்
உயர்தர மாணவர்களுக்கான ஊடகக் கற்கை செயலமர்வொன்று இன்று காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
க.பொ.த.உயர் தரத்தில் ஊடகக்
கற்கைநெறியினை ஒருபாடமாகக் கற்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான ஊடக செயலமர்வே இன்று (02) ஆந் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரனின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவாநந்தன் தலைமையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பி.ப.1.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.இஸ்ஷத் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஊடக துறை ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு குறித்த செயலமர்வை சிறப்பித்துள்ளனர்.
இச் செயலமர்விற்கு வளவாளர்களாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், சிரேஸ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான், றீம் ஸ்பேஸ் அகடெமியின் விரிவுரையாளர் சரபுல் ஆதில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வளவாண்மை செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களை கையாள்வதும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும், ஊடகத் துறையும் அனுபவ பகிர்வும் மற்றும் நவீன டிஜிடல் ஊடகத்துறையும் சவால்களும், வளர்ச்சியும் எனும் தலைப்புக்களில் வளவாண்மை இடம்பெற்றிருந்ததுடன், குறித்த செயலமர்வில் 130 இற்கு மேற்பட்ட மாணவர்கள் மீரா பாலிகா தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி, மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலை, அல்-அமீன் மகா வித்தியாலயம், அல் ஹிறா மகா வித்தியாலயம், பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் காங்கேயனோடை அல் அக்ஷா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின் இறுதியில் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் இச்செயலமர்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பெறுமதிவாய்ந்த சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த செயலமர்வில் மாவட்ட ஊடகப்பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.