புதிய கல்வி வலயமாக பொத்துவில் கல்வி வலயம் உருவாக்கப்பட உள்ளது .

 


பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் வழங்கப்படுமென்று கல்வி அமைச்சர் சுசில்
பிரேமஜயந்த வாக்குறுதியளித்துள்ளதாக, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.எம். முஷாரப்,  தெரிவித்தார்.

பொத்துவில் கல்வி வலயம் எந்தெந்த கொத்தணி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது
உறுதி செய்யப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் புதிய கல்வி வலயமாக பொத்துவில் கல்வி
வலயம் உருவாக்கப்படுமென தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதிய கல்வி வலயங்களை உருவாக்குவது தொடர்பான கூட்டம் கல்வி
அமைச்சில் நடைபெற்றது.

இதில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாணத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்
செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொத்துவிலுக்கான தனியான கவ்வி வலயத்தின் தேவை குறித்து முன்வைத்த கோரிக்கைக்கமைய
அது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு பொத்துவிலுக்கான தனியான வலயம் உருவாக்குவது
தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்த இக் கோரிக்கையை நிறைவேற்றி பொத்துவிலுக்கு தனியான
கல்வி வலயம் வழங்குவதற்கு வாக்குறுதியளித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு
பொத்துவில் மக்கள் சார்பாக பாராட்டு தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.