தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை தொடர்பாக, சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை,- மலேசியா,- சிங்கப்பூர், நாடுகளின் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கான ‘கரிகாற்சோழன்’ (2018_- 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான) விருதுகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் 28.11.2022 மாலை 5.00 மணியளவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பனுவல் அரங்கத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி. தியாகராஜன், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் எம் எம். முஸ்தபா, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளர் தமிழ்ப்புல முதன்மையர் உ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத்தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் வரவேற்புரையாற்றினார்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். திரைப்படப் பாடலாசிரியர்கள் கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் சிநேகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிங்கப்பூர் ‘சிராங்கூன் டைம்ஸ்’ முதன்மை ஆசிரியர் மு. ஷாநவாஸ் நன்றி கூறினார்.
இவ்விருது விழாவில் இலங்கையைச் சேர்ந்த மூன்று படைப்பாளிகள் விருதுகள் பெற்றனர்.
2018 ஆம் ஆண்டுக்கான ‘சாகித்யரத்னா’தி. ஞானசேகரன் எழுதிய எரிமலை நாவல்,
2019 ஆம் ஆண்டுக்கான மு.இ.அச்சிமுகமட் எழுதிய எனது நிலமும் நிலவும்,
2020 ஆம் ஆண்டுக்கானஅருணா செல்லத்துரை எழுதிய பண்டார வன்னியன் (கி.பி 1783-_ 1811).
சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் கரிகாற்சோழன் விருது பெற்றனர். இவர்களுடன் சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களும் விருது பெற்றனர்.