டிசம்பர் 25 ஓர் விடுதலையின் திருநாள் - பிராந்திய குருமுதல்வர் அருட்பணி மணி.லூக்ஜோன்!!




டிசம்பர் 25 ஓர் விடுதலையின் திருநாள், கிறிஸ்து பிறப்பின் நாள் எமது அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் வெறும் பதிலை மட்டுமல்ல மாறாக எங்கள் விசுவாச வாழ்வை தொடர்ந்தும் ஓடி முடிக்கக்கூடிய நம்பிக்கையையும் தருகின்றது என அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் கிழக்கு பிராந்திய குருமுதல்வர் அருட்பணி மணி.லூக்ஜோன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்து பிறப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கி.மு 2 ஆம் நூற்றாண்டளவில் அரசும் சமயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகவே காணப்பட்டன. எருசலேமின் சமூக கட்டமைப்பு குருக்களாலும் தலைமைக் குருக்களாலும் நிர்வகிக்கப்பட்டது. மகா அலெக்ஸாந்தர் கிரேக்க பேரரசை மிக அழகாக விரிவுபடுத்தியதனால் பல நாடுகள் தங்கள் கலாசாரத்தை விடுத்து புதிய கலாச்சாரத்தை விரும்பி பின்பற்றின. கிரேக்க காலனித்துவ செல்வாக்கு யூதேயா முழுவதிலும் இருந்த போதும் யூதர்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கை முறையினை தனித்தன்மையுடன் காத்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கி.மு 198 இல் செலுக்கிய பேரரசு தொலமி அரசை வெற்றி கொண்டு யூதேயா முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தொலமி பேரரசு யூதர்களுக்கு சமூக கலாசார மற்றும் மத உரிமைகளை வழங்கியது போல செலுக்கிய பேரரசு வழங்கவில்லை. செலுக்கிய பேரரசின் ஆட்சியாளர் மூன்றாம் அந்தியோக்கு யூத சமயத்தை முற்று முழுதாக கிரேக்கமயப்படுத்த விரும்பியவராவார்.

கி.மு 175 ல் செலுக்கிய பேரரசில் அரியணை ஏறிய நான்காம் அந்தியோக்கு எப்பிபானஸ் தனது தந்தையை விட பல படிகள் மேலே சென்று உலகளாவிய கிரேக்க மயமாக்களை செய்ய விரும்பினார். இவர் இரண்டு கொள்கைகளை தீவிரமாக செயற்படுத்த விரும்பினார். முதலாவது தனது ஆட்சிக்குட்பட்ட மக்களை ஒன்றுபடுத்துவது. இரண்டாவது தன் அரசை விரிவபடுத்துவது. அதாவது வரலாற்றிலே மகா அலெக்ஸாந்தருக்கு பக்கத்திலே தான் வர வேண்டுமென எண்ணி தன் முன்னோடிகளுக்குள் தன்னை வேறுபடுத்தி கொள்ள முனைந்தார். எனவே இதனை செய்து முடிக்க மக்கள் தங்கள் பாரம்பரிய கலாசாரங்களை கைவிட்டு கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என மக்களை வற்புறுத்தினார்.

இந்த கிரேக்கமயமாக்குதலை யூதேயாவிலுள்ள உயர்மட்ட மக்கள் எதிர்க்கவில்லை. அவர்கள் ஆளும் அரசோடு ஒன்றித்துப்போயினர். ஆனால் சாதாரண மக்கள் இதனை அடியோடு வெறுத்தனர். இவர்கள் தங்கள் சமயத்தையும் கலாசாரத்தையும் கைவிட்டுவிட விரும்பவில்லை. அதற்காக தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர்.

ஆனால் அவர்களை வழிநடத்த ஓர் தலைமை அங்கு தேவைப்பட்டது. இக்காலப்பகுதியில் குரு மத்தியாஸ் என்பவர் இந்த அடக்குமுறைகளையெல்லாம் கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்தார். எப்பிபானஸின் அதிகாரிகள் குரு மத்தியாசிடம் கிரேக்க சிலைகளுக்கு பலியிடுமாறு கட்டளையிடுகின்றனர். ஆனால் குரு மத்தியாஸ் அதனை செய்ய மறுத்து விடுகின்றார். இதற்கு மாறாக அரசனது கொடுமைகளை நிறைவேற்ற வந்த அதிகாரிகளையும் அவர்களுக்கு பணிந்த யூதர்களையும் கொன்று விட்டு திருச்சட்டத்தின் பேரில் பேரார்வமும் உடன்படிக்கை மீது பற்றுறுதியும் கொண்டவர்கள் என் பின்னால் வரட்டும் (ஐ மக் 2:27) என்று அறைகூவல் விடுத்தார்.

இப்பொழுது யூதர்களுக்கு தாம் எதிர்பார்த்திருந்த தலைவர் கிடைத்து விடுகின்றார். இவரும் இவரது ஐந்து புதல்வர்களுமான யோவான், சீமோன், யூதா, எலயேசர், யோனத்தான் ஆகியோர் யூதர்களை ஓர் அணியாக திரட்டினர். இந்த ஒருங்கிணைப்பு தான் யூத தேசியவாதத்திற்கான முதலாவது விதையாக விழுந்தது. இவ்வாறு உரிமைப்போராட்டத்திற்கு தலைமைத்துவம் கொடுத்த (கி.மு 167) மத்தியாசின் குடும்பம் மக்கபேயர் என அறியப்பட்டனர்.

யூதா தனது இராணுவத்துடன் எருசலேம் நோக்கி படையெடுத்து எருசலேம் நகர் மற்றும் ஆலயத்தை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் (1மக்4:36-40). கி.மு 165 டிசம்பர் 25 அன்று தேவாலயம் சுத்தம் செய்யப்பட்டு ஆண்டவருக்கென்று மீளவும் பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்த விழா ஏழு நாட்களுக்கு கொண்டாடப்பட்டது. அந்த நாளை யூதர்கள் இன்று வரை கனுக்கா பண்டிகை என கொண்டாடி வருகின்றனர்.

கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை டிசம்பர் மாதம் 25 ம் திகதி கொண்டாடும் எமக்கு மேற்கூறப்பட்டுள்ள வரலாற்று பின்னணியை விட ஓர் சிறந்த உதாரணம் கிடைக்கப்போவதில்லை. கிறிஸ்துவின் பிறப்பு ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலையின் திருநாளில் நிகழ்ந்த ஒன்று. உரிமைக்காக போராடிய இனத்தின் விடுதலை நாளை கடவுள் தமது குமாரனின் பிறப்பு நாளாக தெரிந்து கொண்டார் என இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.