வறிய நிலையில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய நிலையில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான சபைத் தீர்மானத்திற்கு அமைப்பாக 13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கென போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 417 கர்ப்பிணிப்பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான சத்துணவு பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக கோவில்போரதீவு, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை, பெரியபோரதீவு,பாலையடிவட்டை ஆகிய கிராமங்களில் உள்ள 130 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெல்லாவெளி தாய்சேய் பராமரிப்பு நிலையத்தில் வைத்து போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ரஜினி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் தருமலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் வெல்லாவெளி பொது சுகாதார பரிசோதகர் குபேரன், தாய் சேய் பராமரிப்பு உத்தியோகஸ்தர்கள், போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் கௌரிபாலன் , மற்றும் பிரதேச சபை உத்தியோஸ்தர்கள் ஊழியர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.