தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளப்பதக்கத்தினைப்பெற்று சாதனை படைத்த ஆர்.துஷ்யந்தனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .

 


வடக்கு கிழக்கின் வரலாற்றில் முதன்முறையாக தெற்காசிய குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளப்பதக்கத்தினைப்பெற்று இலங்கைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்ந்த மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் வீரர் ஆர்.துஷ்யந்தனுக்கு  மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து வரவேற்பளிக்கப்பட்டது.

தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் வீரர் ஆர். துஷியந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சேர்த்திருந்தார்.

ஆறாவது தெற்காசிய குமித்தே கராத்தே சுற்றுப்போட்டி இலங்கையில் நடைபெற்றது.இதில் இந்தியா, பூட்டான், பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாள்,இலங்கை ஆகிய ஆறு நாடுகள் பங்குகொண்டன.

இந்த சுற்றுப்போட்டியில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் சார்பில் பங்குகொண்ட துஸ்யந்தன் அவர்கள் 55கிலோவுக்குட்பட்ட 20வயதுக்குட்பட்டவர்களுக்கான குமித்தே கராத்தே போட்டியில் வெள்ளிப்பத்தக்கதை பெற்றுக்கொண்டார்.

இந்தியாவுடனான இறுதிப்போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இரண்டாம் நிலைக்கு சென்று வெள்ளிப்பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமைசேர்த்திருந்தார்.

இவர் இன்று மட்டக்களப்புக்கு வருகைதந்தபோது மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன்,மட்டக்களப்பு விளையாட்டுக்கழக தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான து.மதன்,மாநகரசபை உறுப்பினர்கள்,விளையாட்டு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்கள்,பயிற்சியாளர்களை வரவேற்றனர்.

இதன்போது மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு சாதனை படைத்த வீரரும் அவருக்கு பயிற்சிகள் வழங்கிய மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் எச்.ஆர்.சில்வா,பயிற்றுவிப்பாளர் என்.கௌசிகன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

திறமையான வீரர்கள் உள்ளபோதிலும் அவர்களுக்கு பயிற்சிகளைப்பெறுவதற்கு போதிய உபகரணங்கள் இல்லையென இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு ஜேகோமோ கழகத்தின் பயிற்றுவிப்பாளர் என்.கௌசிகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் ஊடாக வீரர்களின் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்படும் என இங்கு கருத்து தெரிவித்த மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.