காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

 

 


இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

இந்தியாவுடனான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் தமிழர்கள் வாழும் திருகோணமலை - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது, தென்னிந்தியாவுக்கும் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பு வர்த்தகர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட தமிழக வர்த்தகர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

 தற்போது தமிழக வர்த்தகர்கள் நலன் கருதியும் இந்தியாவுக்கு செல்லும் இலங்கை யாத்ரீகர்கள் நலன் கருதியும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதனை இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் நிமல சிறிபால டி சில்வா கூறியிருக்கிறார். இந்த சேவையானது ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.