கிழக்கில் தமிழர்கள் தனித்து பெரும்பான்மையை நிலை நாட்ட முடியாது என்பதால்த்தான், ஜனாதிபதி உட்பட பல அரசியல்வாதிகள் கிழக்கை தனித்து ஒதுக்கி நடக்க முயலுகின்றனர்; அதற்கு இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை (17) அம்பாறை மாவட்டத்துக்கு சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, முதலில் திருக்கோவிலுக்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் திருக்கோவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; அம்பாறையும் திருகோணமலையும் ஆபத்தான நிலையில் உள்ளன. வடக்கு, கிழக்கில் மிகமுக்கியமாக எங்களது கரிசனை கிழக்கினை நோக்கி இருக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பேசுகையில், வடக்கு, கிழக்கு பிரச்சினை என இரண்டாகப் பிரித்து, தீர்வுத் திட்டத்தை முன்மொழிவது ஜனாதிபதியின் பிரித்தாளும் தந்திரமாக உள்ளது. அதேபோல் உள்ளூராட்சி சபை பிரிப்புகளும் இந்தவகையில் அமைய கூடாது எல்லை நிர்ணயம் சரியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.