மட்டக்களப்பு மாநகர சபையின் ஒளி விழா நிகழ்வு மிகப்சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் மாநகர சபையின் ஆணையாளருமான நா.மதிவண்ணன் தலைமையில் மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இயேசு சபை மேலாளர் அருட்பணி ரீ.சகாயநாதன் அடிகளார் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், புளியந்தீவு சேகரம் தேவாலயத்தின் முகாமை குரு அருட்பணி.சாம் சுபேந்திரன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர சபையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதிதிகள் வரவேற்பினை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் வரவேற்புரை, தலைமையுரை, சிறார்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளை அரங்கேற்றிய சிறார்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாநகர சபை ஊழியர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு சுமார் 05 இலட்சம் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.