விவசாய அமைச்சுக்கு சொந்தமான உரக் களஞ்சியசாலைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவித்த விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று (05) முதல் அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதற்கிணங்க, ஒரு ஹெக்டேயருக்கு 157.5 கிலோ கிராம் யூரியா உரம் ஒரே தடவையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானிய விலையில் உரம் வழங்குவதற்கு அரசாங்கம் 18,000 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இயற்கை உரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் மானியம் அடிப்படையில் உரத்தை வழங்குவற்கு அரசாங்கம் சுமார் 16,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மூன்று உரக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒரு கப்பலில் 41,876 மெற்றிக் தொன் உரமும், மற்றைய கப்பலில் 16,000 மெற்றிக் தொன் யூரியாவும் மற்றுமொரு கப்பலில் 9,300 மெற்றிக் தொன் யூரியாவும் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.