விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.


 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் விவசாய துறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து விவசாய துறையினை வளர்ச்சி துறைக்கு கொண்டுசெல்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்களுடன் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்றுஇடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் விவசாயிகள் தாம் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் தொடர்பாக பல முன்மொழிவுகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பிரதானமாக சந்தைப்படுத்தல் பிரச்சனை, நீர் முகாமைத்துவம், உற்பத்தி தொடர்பான பிரச்சனைகள், உற்பத்தியின்போது ஏற்படுகின்ற பசளைப் பயன்பாடுகள் போன்ற விடையங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு பல்கலைக்கழகத்தினால் ஆய்வு ரீதியாக பல விடையங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அத்தோடு பல்கலைக்கழகத்தினால் எதிர்வரும் ஆண்டில் மாணவர்களை விவசாயிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக சமூகம் சம்மதத்தினை தெரிவித்துள்ளது.

அத்தோடு பல்கலைக்கழகம் ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் இந்த நிறுவனம் தனித்து இயங்க முடியாது என்றவகையில் ஏனைய நிறுவனங்களுடன், பல்கழைக்கழகம் சார்ந்த சமூகத்துடன் இணைந்து செயற்படுவதுடன், சமூகத்தின் தேவைகளை
பூர்த்தி செய்வதற்காக பல்கலைக்கழக வளவாளர்களுடன் ஆய்வாளர்களை மையப்படுத்தி சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கலந்துரையாடலாக குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்ததாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் இதன்போது தெரிவித்திருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் சமூக இணைப்பிற்கான மையத்தின் பணிப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பீடாதிபதிகள், மாவட்ட விவசாய பணிப்பாளர் இராஜதுரை ஹரிகரன், பிரதி விவசாய பணிப்பாளர் பேரின்பராசா,மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜெகன்நாத், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், விவசாய சம்மேளன தலைவர் ரஞ்சிதமூர்த்தி, விவசாய திணைக்கள அதிகாரிகள், கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்