இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2023ஆம் ஆண்டை நாவலர் ஆண்டாக,
ஜனாதிபதி முன்னிலையில் பிரகடனப்படுத்தி இருந்தமையை அடுத்து, நல்லைநகர்
ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்றிட்டங்கள், முதன்முதலாக விபுலானந்த
அடிகள் பிறந்த காரைதீவில் முன்னெடுக்கப்பட்டன.
நாவலர் ஆண்டின் 17 செயற்றிட்டங்களில் வீதி ஒன்றுக்கு ‘நாவலர் வீதி’ எனப்
பெயர் சூட்டும் தீர்மானமும் காரைதீவு பிரதேச சபையில்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கில், நல்லூரில் பிறந்த நாவலர் பெருமானுக்கு கிழக்கில், காரைதீவில்
பிறந்த விபுலானந்த அடிகளாரின் கோட்டையில் முதல் கௌரவம்
வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், நாவலர் ஆண்டை முன்னெடுக்க, காரைதீவு பிரதேச சபையில் சம்பிரதாய
பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, பிரகடனம் செய்யப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் முன்னிலையில், ஆன்மீக ஆர்வலரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான வி.ரி சகாதேவராஜா முன்மொழிந்து நாவலர் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கு. ஜெயராஜியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரகடன நிகழ்வில், உத்தியோக பூர்வமாக நாவலர் பெருமானின் திருவுருவப்படம் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.