உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள், மற்றும் பிரதான அம்சங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக ஒரு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.
இக்கடிதத்தைக் கனேடிய தமிழர் தேசிய அவை, டெனிஷ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம், இத்தாலி ஈழத் தமிழர் மக்கள் அவை, தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு, ஜேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை, நியூசிலாந்து தமிழர் தேசிய அவை, நெதர்லாண்ட் ஈழத் தமிழர் பேரவை, நோர்வே ஈழத் தமிழர் அவை, சுவிஸ் ஈழத் தமிழரவை, தமிழர் பண்பாட்டுக் கழகம் பெல்ஜியம் ஆகிய அமைப்புக்களே கூட்டாக இணைந்து அனுப்பி வைத்துள்ளன.
தமிழ் மக்கள் சரர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முன்னர் கீழே தரப்பட்டுள்ள தமிழ் மக்களினது பேரம்பேசப்பட முடியாத அடிப்படைக் கோட்பாடுகளையும் பிற முக்கிய அம்சங்களையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற்கொள்ள வேண்டுமென அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1. இலங்கைத் தீவில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரச் சிக்கலோடு
பொறுப்புக் கூறல், தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி வழங்கல் ஆகிய பாரிய
அழுத்தங்கள் காரணமாக இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்களுடன் தாம்
நல்லிணக்கத்தை பேண முயற்சிப்பதாக அனைத்துலகச் சமூகத்திற்குக் காட்ட வேண்டிய
நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
எழுபது ஆண்டுகாலமாக அடுத்தடுத்து வந்த அரசுகளின் ஏமாற்று வரலாற்றின் பின்னணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்தைகளுக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
13 ஆம் சட்டதிருத்தம்
2.
ஓற்றை ஆட்சி முறையிலான தற்போதைய அரசியலமைப்பு, அதன் 13 ஆம் சட்டதிருத்தம்,
ஏற்கனவே தோல்வியடைந்த மாகாணசபை முறைமை ஆகியன தமிழர் தேசிய இனத்தின்
நியாயபூர்வமான அபிலாசைகளைத் தீர்ப்பனவாக இல்லை.
நாட்டின் இந்த ஒற்றையாட்சிப் படிநிலைக் கட்டமைப்பு அகற்றப்படும்வரை சமஸ்டி முறையான ஒர் அரசியலமைப்புக்கூட நடைமுறைச் சாத்தியப்பட மாட்டாது.
பேரம் பேசமுடியாத கோட்பாடு
3.
இந்திய அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள், தமிழ்
மக்கள் பேரவையின் 2016 ஆம் ஆண்டின் முன்மொழிவுகள் உட்பட வரலாற்று ரீதியாகப்
பல தடவைகள் தமிழ் மக்கள் தம் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை
வெளிப்படுத்தியுள்ளனர்.
பேரம் பேசமுடியாத அந்த அடிப்படைக் கோட்பாடுகளாவன:
1) தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்,
2) தமிழ் மக்கள் விட்டுக்கொடுக்க முடியாத தன்னாட்சியுரிமை உடையவர்கள்,
3) வரலாற்று ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரித்தெடுக்க முடியாதஒன்றிணைந்த தமிழர் தாயகமாக இருந்து வந்துள்ளது.