மயில்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள் .

 




 

·

வெள்ளை நிறத்தில் சிங்கங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்...சிங்கங்கள் மாத்திரமல்ல . வெள்ளை அணில், வெள்ளைக் காகம், வௌளைக் கங்காரு, வெள்ளைத் திமிங்கலம், வெள்ளை முதலை, வெள்ளை மான், வெள்ளைப் புலி, வெள்ளை ஒட்டகம் என்றும் உயிரினங்கள் இருக்கின்றன..

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால் வெள்ளை மயிலும் இருப்பதுதான்.உயிரியல் ரீதியாக நிறக் குறைபாடு ஏற்பட்டு பிறப்பவையே வெள்ளை மயில்கள்.

 

தேசீயப் பறவை என்றாலும், இந்தியாவில் அதிகம் கொல்லப்படுவது இந்த அழகிய மயில்தான்..யானைக்கு அதன் தந்தமே எதிரியாக இருப்பதுபோல, மயிலுக்கு முதல் எதிரி இதன் அழகிய தோகைப் பீலிகள்..பல பறவைகள் கொல்லப்பட்டு, விசிறிகளாய் மனிதர்கள் கைகளில் இருக்கின்றன.

இரண்டாவது எதிரி , இதன் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் தைலமும், மயில் உடல் கொழுப்பும் பல வியாதிகளுக்கு மருந்து என நாட்டில் பரவியுள்ள தவறான நம்பிக்கைகள்தான்.

இந்திய மயில் நீல நிறத் தோகைகளைக் கொண்டது. இதற்கு நீல மயில் என்ற பெயரும் உண்டு. இந்தோனேசியா, பர்மா போன்ற இடங்களில் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை மயில் என்றழைக்கப்படுகிறது. பச்சையின் ஒரு வடிவத்தை நீலப் பச்சை என்று அழைப்பதுமுண்டு.

வெள்ளைப் புலி போன்று நீல மயிலின் மருவிய தோற்றமே வெள்ளை மயில் என்று அறியப்படுகின்றது.

ஒரே கூண்டில் நான்கைந்து நீல மயில்களை ஒன்றாக வைத்து வளர்க்க முடியும். பச்சை மயிலை அவ்வாறு வளர்க்க முடியாதாம். காரணம் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து விடும் என்கிறார்கள்.

 புராணங்களில் , கலாச்சாரங்களில் கூட இந்த மயிலுக்கு முக்கிய இடமுண்டு. முருகக் கடவுளின் வாகனம் மயில் என்பது உங்களுக்கு தெரியும். கிரேக்கர்கள் வழிபாட்டிலும் மயில்கள் இடம்பெற்றிருந்தன.

கால் விரல்களிடையே சவ்வுகள் இருந்தாலும் மயில்கள் நீச்சலடிப்பதில்லை. அந்த சவ்வுகள் தரைப்பகுதியை பற்றிக்கொள்ள மட்டுமே உதவுகின்றன. மயில்கள் அழகான தோகையை கொண்டிருந்தாலும், அது நீச்சலடிக்க உதவுவதில்லை.

மயில்களால் 11 வித்தியாசமான ஒலிகளை எழுப்ப முடியும். அந்த ஒலிகள் மனிதர்களுக்கு எரிச்சலூட்டுவதாகவே இருக்கும். பொதுவாக மயில்கள் மழையை அறிவிக்க ஒலி எழுப்புகின்றன. நாய்கள் எழுப்பும் ஒலியை ‘குரைத்தல்‘ என்பது போல மயில்கள் எழுப்பும் ஒலியை ‘அகவுதல்‘ என்கிறோம்.

பொதுவாக மயில்கள் அடர்ந்த காடுகளில் வாழ விரும்புவதில்லை. உயரப் பறக்கவும் முடியாதவை...குறிப்பிட்ட துாரம் வரைக்குமே பறக்கும்.

மயில் தமிழில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம் என்று பல்வேறு சொற்கள் மயிலைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.